Thursday, May 7, 2009

இடுக்கண் வருங்கால் நகுக...

வீட்டை பூட்டி ஒரு முறைக்கு இரண்டு முறை இழுத்து பார்த்திட்டு, ' வா சந்தோஷ் போகலாம்' என்று நளாயினி சந்தோஷ் கையை பிடித்து கொண்டு பேருந்து நிலையம் நோக்கி நடந்தாள் . தெரு முனையில் உள்ள விநாயகரை பார்த்து, 'ஆண்டவா , சீக்கிரம் பஸ் கிடைக்கணும்' என்று ஒரு கும்பிடும் போட்டு கொண்டாள்.
மெயின் ரோடு வந்ததும் சந்தோஷ் வேடிக்கை பார்த்து கொண்டே வந்ததில் நடை கொஞ்சம் மெதுவானது. 'அப்புறம் அதெல்லாம் வேடிக்கை பார்த்துக்கலாம் பா, இப்போ கொஞ்சம் வேகமா நட, பஸ் போய்ட போகுது' , சொல்லிக்கொண்டே பின்னாடி பஸ் வருதான்னு அடிக்கடி திரும்பி பார்த்து கொண்டாள்.

பஸ் ஸ்டாண்ட் நெருங்கிய பின் சுற்றி கூட்டம் இருப்பதை பார்த்து ரொம்ப நேரம் பஸ் வர வில்லை என்று புரிந்தது.
கடிகாரத்தை பார்த்து கொண்ட நளாயினி, 'காலை 9 மணிக்கே என்ன வெயில், மண்டைய பிளக்கிறது இந்த கத்திரி வெயில், இன்னும் போக போக எப்படி இருக்குமோ' என்று எண்ணியவாரே ரோட்டில் போகும் கார்கள் மீது கண்கள் திரும்பியது. அந்த கண்களில் ஒரு ஏக்கமும் தெரிந்தது.

இப்படி யோசித்து கொண்டிருக்கும் வேளையில் சில பேர் ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் நகர்வது தெரிந்தது, பஸ் வந்த பாடில்லை.
என்ன கொடுமை இது என்று புலம்பும் போதே வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிகிற மாதிரி பேருந்து நிலையம் புகை வண்டி நிலையம் ஆகி கொண்டிருந்தது, ஏன் தான் இப்படி பேருந்து நிலையம் பக்கத்திலேயே ஒரு டீக்கடை போடுறாங்களோ ? டீ குடிக்க வர்றவங்களை விட சிகரட் பிடிக்க வர்றவங்க தான் அதிகம். 'சந்தோஷ், வா கொஞ்சம் தள்ளி அந்த பக்கம் போய் நிற்போம்'. இட மாற்றம் யோகம் போல இருக்கே, பஸ் வந்திடுச்சு !!
பஸ் வந்தது...வந்தது...வந்து பஸ் ஸ்டாண்டில் நிற்காமல் ஒரு மைல் தள்ளி போய் நின்றது.நளாயினி முகத்தில் கோபமும் எரிச்சலும் தெரிந்தது, 'பஸ் ஸ்டாண்ட் என்று பெயர் வச்சிட்டு ஒரு பஸ் ஆவது நிக்குதா ? ' . இப்படியே ஒரு அரை மணி நேரம் போனது. நடுவில் வந்த 3-4 பேருந்தும் வேறு பக்கம் போகிறவை.

'அம்மா, கால் வலிக்குதுமா, எவ்வளவு நேரம் இங்கயே நிக்குறது ? ' சந்தோஷ் சிணுங்க ஆரம்பித்தான். 'இன்னும் கொஞ்ச நேரம் தான்பா, அடுத்த பஸ் நம்ம போற பஸ் தான்', சொல்லி கொண்டு இருக்கும் போதே பஸ் வந்தது. ஒரு வழியாக முட்டி மோதி உள்ளே ஏறினர்.

ஒரு இரண்டு ஸ்டாப் பிறகு உட்கார இடமும் கிடைத்தது. அங்கங்கே டிராபிக் வேற தொல்லை கொடுத்தது.வெளியில் எட்டி பார்த்தவள் கண்ணில் அதிகம் தென் பட்டவை கலர் கலர் கார்கள்.
மனசு சும்மா இருக்குமா, பேச ஆரம்பித்தது...இல்லை புலம்ப ஆரம்பித்தது.
'இந்நேரம் ஒரு கார் இருந்திருந்தா என்ன சுகமா வேகமா போயிட்டு வந்திருக்கலாம், இந்த நானோ கார் பத்தி ஏதோ நியூஸ் லே சொன்னானே ? விலை ரொம்ப குறைவுன்னு! அது என்னனு பார்த்திட்டு வீட்டு பட்ஜெட் போடும் போது கார் வாங்க ஒரு பங்கு போடணும். இந்த பேருந்தில் ஒரு இடம் போயிட்டு வரதுக்குள்ள பாதி உயிர் போய்டுது. இதுல பேருந்து கட்டணம் வேற ஏத்திட்டாங்க' .

டரு - புரு என்று உரும்பி கொண்டே பஸ் கொஞ்சம் கொஞ்சமா நகந்தது.

'அம்மா, இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்மா ?'
'இன்னும் ஒரு பத்து நிமிஷம் தான்பா' வாய் சொன்னாலும் மனசு நம்ப முடியவில்லை. செக்கிங் என்று சொல்லி பஸ் ஓரம் கட்டியாச்சே !!

முகம் வாடி போன பிள்ளையை பார்த்து, 'நம்ம சீக்கிரம் ஒரு கார் வாங்கிடலாம் சந்தோஷ், அங்க பாரு எவ்வளவு அழகா குட்டியா கார் பாரு. அந்த மாதிரி ஒன்னு சீக்கிரம் வாங்கலாம் சரியா ? அதுக்கு அப்புறம் நம்ம ஜாலியா போலாம், என்ன?'
சந்தோஷ் பதில் ஏதும் சொல்லாமல் வெளியில் எட்டி பார்த்தான், 'அதோ அந்த காராமா?' '
'அந்த மாதிரி பா, உனக்கு பிடிச்ச ப்ளூ கலர் லே வாங்குவோமா ?'
சந்தோஷ் பார்வை இன்னும் அந்த கார் மேலேயே இருந்தது,
சிறிது நேரம் கழித்து 'வேணாம்மா அந்த மாதிரி கார்'.
நளாயினி ஆச்சரியமாய் 'என்னப்பா ? இதோ இங்க பாரு, இந்த கார் நல்ல இருக்கா ?'
சந்தோஷ் தலையை ஆட்டியவரே, 'வேண்டாம்மா, அந்த கார் எல்லாம் ரொம்ப குட்டியா இருக்குமா....எனக்கு பஸ் தான் பிடிச்சிருக்கு, பெருசா இருககு இல்லமா, அப்புறம் நிறைய சீட், ஜன்னல் எல்லாம் இருக்குமா, நிறைய வேடிக்கை பாக்கலாம்'.

கால் வலி, களைப்பு இதெல்லாம் மறந்திட்டு பெருமையாய் பேசி கொண்டிருந்த சந்தோஷை வாயடைத்து போய் பார்த்து கொண்டிருந்தாள் நளாயினி. அவர்களை புன்னகையோடு பார்த்து கொண்டிருந்தார் வள்ளுவர், அவருக்கு அருகில்.......
"இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வ தஃதொப்ப தில் . "

Wednesday, April 22, 2009

சு. பா.

தமிழ் வலைப்பதிவு தொடங்குவது என்றும், தாத்தாவின் படைப்புக்களை( அப்படியே என்னோடதையும் ) போடலாம் என்றும் முடிவாயிற்று. அதற்கு முன் பெயர் என்ன வைப்பது ? அதனால் தாத்தா பெயரில் இருந்து யோசிக்க தொடங்கினேன் !!
ஒரு முறை தாத்தா எனக்கு கூறியது நினைவில் வந்தது, 'என் பெயர் சுந்தரபாண்டியன், அதை சுருக்கமா சு. பா. (சுனா பான ) என்றும் சில பேர் கூப்பிடுவாங்க'. அதற்கு நான் சொன்ன பதில், 'ஐ !! என்னோட பெயரும் அது தானே'. அதனால் அதிகம் யோசிக்காமல் சட்டென்று தோன்றியது தான் இந்த சுனா-பானா.

ஒரு பதிவின் நடுவில் நல்ல தமிழ் பத்தின ஒரு பாட்டாக இருக்கணும் என்று யோசித்த போதே பாரதியின் 'யாமறிந்த மொழிகளிலே ' மனதில் பட்டது. கவிதையை டைப் செய்யும் போது, இங்க இன்னொரு சுனா-பான இருப்பதை உணர்ந்தேன். அது தான் நம்ம பாரதி - மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

அதனால் இந்த பெயரே பதிவிற்கு வைப்பது என்று முடிவு செய்தேன்.

தாத்தா..

முதல் பதிவு எப்படியும் ப்ளாக் ஆரம்பிக்க காரணம், தமிழில் எதுக்கு, ஏன் என்று ஒரு வரலாறு சொல்ல வேண்டும். அதனால் இதோ,

ஒருமுறை
நானும் தாத்தாவும் பேசி கொண்டிருந்தோம்.
தாத்தா என்னிடம் சொன்னது , " நீ கவிதை எல்லாம் எழுதுவியாமே? என்னிடம் கொண்டு வந்து காட்டு" .
நான் : 'ஐயோ!! உங்களை மாதிரி எனக்கு நல்ல, இலக்கணம், செந்தமிழ் நிறைந்த கவிதை எல்லாம் எழுத தெரியாது, ஏதோ சும்மா புது கவிதை மாதிரி இருக்கும்'.
தாத்தா: ' பரவாயில்லை, கொண்டு வா, பார்ப்போம். உன்னோடதையும் என்னோடதையும் சேர்த்து புதுமையும், பழமையும் கலந்த படைப்புக்கள் கொண்ட ஒரு புத்தககமாக வெளியிடுவோம்' .
எனக்கு அப்பொழுதெல்லாம் அவரிடம் என்னோட கவிதைகளை காட்ட பயம். கடைசி வரை காட்டவும் இல்லை, ஆனால் அந்த புத்தகம் வெளியிடும் ஆசை மட்டும் மனதில் இருந்து கொண்டே இருந்தது.
அதை செயல் படுத்தும் முன்னவே அவர் இறைவனடி சேர்ந்தார் ( வருடம் 2007 )

அதே வருடம் தமிழ் வலைப்பதிவுகள் மிகவும் பிரபலம் ஆகி கொண்டிருந்த நேரம் .நானும் என் கணவரும் எழுதும் வலைப்பதிவில் தமிழில் எழுதலாம் என்று சில சில தமிழ் பதிவுகள் எழுத ஆரம்பித்தேன்.
அப்போதே தாத்தா வின் படைபுக்களை தமிழ் வலைப்பதிவில் போடும் எண்ணம் தீவிர மானது. அவைகள் வெறும் காகிதத்தில் வைக்க படவேண்டியவை அல்ல. பல காலங்களுக்கும், இனி வரும் பல சந்ததிகளும் படிக்க வேண்டிய பொக்கிஷங்கள். இந்த கணினி யுகத்தில் தான் இதனை சாதிக்க எத்தனை வழிமுறைகள். அதில் ஒன்று தான் இந்த தமிழ் வலைப்பதிவு - தாத்தாவிற்காக !!